By August 5, 20180 CommentsReport

வரலட்சுமி: ஒரு நடிகையின் பரிணாமம்..!!

ஒரு நடிகையாக சண்டக்கோழி 2 திரைப்படம் எனக்குப் பரிணாம வளர்ச்சி என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. அப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களைக் கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்தது.

தற்போது வரலட்சுமி சரத்குமார், கைவசம் சர்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, விமலின் ‘கன்னி ராசி’, பிரியதர்ஷினியின் ‘சக்தி’, வினய்யின் ‘அம்மாயி’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘மாரி 2’, விஜய்யின் ‘சர்கார்’, ஜெய்யின் ‘நீயா 2’, சரத்குமாரின் ‘பாம்பன்’, மனோஜ்குமார் நடராஜனின் ‘வெல்வெட் நகரம்’ என அடுத்தடுத்து படங்களில் பிசியாக இயங்கி வருகிறார். இதில் பாதி படங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது சண்டக்கோழி 2 திரைப்படத்தில் நடித்த அனுபவம் மற்றும் அப்படத்தில் பணியாற்றும் போது எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. “ஒரு நடிகையாக சண்டக்கோழி 2 பரிணாமம். மிக யதார்த்தமாக உணர்கிறேன். எனக்குப் பலவிதமான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளது பெரிய ஆசீர்வாதம். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போதும் என் மீது அன்புகாட்டுகின்ற ரசிகர்களுடன் ஒரு பெரிய நன்றியை பகிர்ந்து கொள்கிறேன். எனக்குக் கொடுக்கப்படும் பெரிய பாத்திரங்களை நான் தைரியமாக செய்வேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஷாலின் ஆரம்பகால வெற்றிப்படங்களில் முக்கியமானது சண்டக்கோழி. மதுரையை மையமாக வைத்து வெளியான அப்படம் அவருக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. 2005ஆம் ஆண்டு வெற்றி பெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை 13 ஆண்டுகள் கழித்து இயக்கி வருகிறார் லிங்குசாமி. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*