By August 5, 20180 CommentsReport

விஷால்: ஒரே நேரத்தில் இரு படங்கள்..!!

நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால் திரைத்துறை தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வந்தாலும் ஆண்டுக்கு இரண்டிலிருந்து மூன்று படங்கள் அவர் நடிப்பில் வெளியாகிவிடுகின்றன.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருந்த துப்பறிவாளன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் மே மாதம் வெளியான ‘இரும்புத்திரை’ தகவல் திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியது. இணைய வளர்ச்சி காரணமாக அதிகரித்துள்ள இப்பிரச்சினை குறித்து சுவாரஸ்யமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததால் படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 18ஆம் தேதி படத்தை வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விஷால் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார்.

2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடித்திருந்தனர். பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்ததுடன் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இதன் தமிழ் ரீமேக்கில் விஷால் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லக்‌ஷ்மன். இவர் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். படக்குழு பற்றிய முழு விபரங்கள் வெளியாகவில்லை. இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*