2.o: ரிலீஸை எதிர்பார்க்கும் அக்ஷய்..!!
ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் 2.o திரைப்படத்தைத் தான் மட்டுமல்ல தனது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துள்ளதாக அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன் இணைந்து நடிக்கும் 2.o திரைப்படம் மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்து வருகிறது. படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுப் பல முறை மாற்றப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் நிறைவடையக் கால தாமதம் ஆவதால் ரிலீஸ் தள்ளிப்போவதாகப் படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. கிராபிக்ஸ் பணிகளைச் செய்யும் நிறுவனம் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடித்துக்கொடுக்கச் சம்மதம் தெரிவித்ததால் நவம்பர் 29ஆம் தேதி படம் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கத் தொடங்கிய பின் அவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 2.o எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்டு’ என்ற பாலிவுட் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் அக்ஷய் கலந்து கொண்டு வருகிறார். அந்த நிகழ்ச்சி ஒன்றில் 2.o படம் குறித்து பேசிய அவர், “நான் மட்டுமல்ல எனது ரசிகர்களும் 2.o படத்தை எதிர்பார்த்துள்ளனர். எனது ரசிகர் ஒருவர் நீங்கள் அந்தப் படத்தில் நடித்தீர்களா இல்லையா எனக் கேட்டார். எப்போது ரிலீஸ் என்ற ஆவல் எனக்குள் உள்ளது. இது முக்கியமான, அருமையான படம். நான் இன்னும் முழுவதுமாக படத்தை பார்க்கவில்லை. டப்பிங்கின் போது சில காட்சிகளைப் பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
2.o டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தகவல் பரவியது. ஆனால் இது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.