By September 22, 20180 CommentsReport

ஷா ருக்குக்கு ஆதரவாக குஷ்பு..!!

நடிகர் ஷா ருக் கானின் மகன், விநாயகர் சிலை முன் வணங்குவது போன்ற புகைப்படத்துக்குக் கண்டனங்கள் குவிந்துவரும் நிலையில், நடிகை குஷ்பு அதற்கு ஆதரவாகத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ஷா ருக் கான் மனைவி கவுரி கான் ஒரு இந்து. மகனுக்கு ஆர்யன் என்றும், மகளுக்கு சுஹானா என்றும் பெயரிட்டுள்ளனர். மூன்றாவது குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த கான் தம்பதியினர் அந்தக் குழந்தைக்கு ஆப்ராம் என்று பெயரிட்டனர். ஷா ருக் வீட்டிலும் அவருடைய குழந்தைகள் இரண்டு மத சம்பிரதாயங்களையும் பின்பற்றுகின்றனர். இஸ்லாமில் நம்பிக்கை கொண்டவரான ஷா ருக், அதே நேரத்தில் தன் மனைவியின் மதத்தையும் மதிப்பதாகப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஷா ருக் கானின் மூன்றாவது மகன் ஆப்ராம், வீட்டில் விநாயகர் சிலையின் முன் வணங்குவதைப் போன்ற புகைப்படத்தை ஷா ருக் கான் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து பலரும் அவரது மதம் குறித்து கேள்வியெழுப்பி, முஸ்லிமாக இருந்து கொண்டு இப்படி செய்வது தவறு என்கிற ரீதியில் வெறுப்பை உமிழும் கருத்துகளைப் பகிர ஆரம்பித்தனர். #SRKFansUpset என்கிற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ஷாருக் மீது வசைமொழிகள் வீசப்பட்டன.

அதில், “இது தவறு, நீங்கள் ஒரு முஸ்லிம், ஏன் கணபதி நாளைக் கொண்டாடுகிறீர்கள்?” என்று ஒருவர் கேட்க, இன்னொருவரோ, “அல்லாவின் ஆணையை மதிக்காமல், குரானைப் படித்து விட்டு சிலைகளை வணங்கினால், இவ்வளவு பணமும், புகழும் இருந்து என்ன பிரயோஜனம்?” என்கிற ரீதியில் கேள்வி கேட்டிருக்கிறார். இது போன்று ஷா ருக் கானை வசைபாடும் எண்ணற்ற கருத்துகளுக்கு மத்தியில், “ஷா ருக் உண்மையான மனிதர், அனைத்து மதங்களையும் மதிப்பவர், அவர்தான் உண்மையான முஸ்லிம்” என ஷா ருக் கானுக்கு ஆதரவு தெரிவித்தும் நிறைய கருத்துகள் போடப்பட்டு வருகின்றன.

இப்படியாக இந்தப் புகைப்படத்தின் கீழ் மத ரீதியாகப் பெரிய கருத்து மோதலே நடந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகை குஷ்பு, “இறைவன் ஒருவரே. நம்பிக்கையுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இது கற்றுத்தரப்படவில்லையா? ஷா ருக் கான் முஸ்லிமாக இருந்தால் என்ன? இறைவன் முஸ்லிம் இல்லை. இந்துக்கள் மட்டுமே தன்னை வணங்க வேண்டும் என்று கணபதி கூறியதில்லை. இறை சக்தியின் மேல் நம்பிக்கையிருந்தால், இறைவன் ஒருவனே என்பதை நம்புங்கள். ஷா ருக் கானை கிண்டல் செய்வது அருவருப்பாக இருக்கிறது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*