தனுஷுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்..!!
நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேலூர் தம்பதியர் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் நேற்று (நவம்பர் 9) உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுஷை தனது மகன் என்றும், தனக்கு மாதம் தோறும் ஜீவனாம்சம் வழங்கக்கோரியும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான நடிகர் தனுஷின் உடலில் இருப்பதாக கதிரேசன் குறிப்பிட்ட அங்க அடையாளங்களை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து மேலூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நடிகர் தனுஷ் போலியான கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியதாக கூறி மதுரை கோ.புதூர் காவல் நிலையத்திலும், மாநகர காவல் ஆணையரிடமும் கதிரேசன் புகார் அளித்தார்.
இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, தான் அளித்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண்.6) வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதித்துறை நடுவர் வி.ஏ.தமிழரசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.