By January 9, 20190 CommentsReport

பேட்ட படம் என் சினிமா வாழ்க்கையை மீட்டு கொடுத்துவிட்டது – சிம்ரன்..!!

பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இன்னும் இளைமையாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார் சிம்ரன். அவர் அளித்துள்ள பேட்டி விவரம்:-

கேள்வி:- பேட்ட படத்தில் உங்கள் தோற்றத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதே?

பதில்:- இது எனக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு. கடுமையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, யோகா மூலம் என்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளேன். ஒருவேளை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் பெறுவதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கே:- நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த நீங்கள் திடீர் என்று ரஜினி படத்தில் நடிப்பது பற்றி?

ப:- பேட்ட படம் என்னுடைய பாதையை மீட்டு கொடுத்துள்ளது. என்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். இந்த படத்துக்கு பின்னர் நான் நடிக்கும் படங்களை பொறுப்புடன் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி உள்ளது.

கே:- ரஜினியுடன் நடித்த முதல் நாள் அனுபவம்?

ப:- நான் ரஜினியின் தீவிர விசிறி, அவரை போல நடக்கவும் கண்ணாடியை ஸ்டைலாக அணியவும் பலமுறை முயன்று இருக்கிறேன். முதல் நாள் நடித்தபோது பதட்டமாகி என் வசனத்தையே மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அமைதியாக்கி சகஜமாக பேசினார். நாம் எல்லோருமே ரசிகர்களை மகிழ்விக்க தான் நடிக்கிறோம் என்று கூறி என்னை ஆசுவாசப்படுத்தினார்.

கே:- சந்திரமுகி படத்தில் நடிக்க வேண்டியது நின்று போனதில் வருத்தம் உண்டா?

ப:- ஆமாம். அந்த படத்தை இழந்ததில் எனக்கு நிறைய வருத்தம் உண்டு. ஆனால் ஒரு அழகான காரணத்தால் தான் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் 4-வது நாள் நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. எனவே தான் நடிக்க முடியாமல் போனது.

கே:- கர்ப்பமானதால் ஒரு படத்தை இழந்தபோது ஒரு பெண்ணாக சினிமாவில் இருப்பதன் சிரமத்தை உணர்ந்தீர்களா?

ப:- இல்லை. நான் எப்போதுமே அப்படி நினைத்தது இல்லை. ஒரு பெண்ணாக இருப்பது ஆணாக இருப்பதைவிட உயர்ந்தது. என்னுடன் தொடக்க காலத்தில் நடித்த விஜய் இப்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதில் எனக்கு மகிழ்ச்சியே. அதே நேரத்தில் அவர் வீட்டில் ஒரு தந்தையாக இருக்கிறார். அதேபோல் தான் சினிமா எனக்கு தொழில். வீட்டில் மனைவி. இரண்டையும் சமமாக பார்க்கிறேன்.

கே:- 1990-களில் நீங்களும் ஜோதிகாவும் தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தீர்கள். அந்த நினைவுகள் வருமா?

ப:- அந்த நாட்களை நினைத்து பார்த்தால் சந்தோ‌ஷமாக இருக்கும். இன்னமும் ரசிகர்கள் மனதில் எனக்கு தனி இடம் இருப்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

கே:- சினிமாவுக்கு நிகராக டிவி, இணைய தொடர்கள் வந்துவிட்டதே?

ப:- பெண்கள் தொடர்பான படங்களுக்கு நிறைய தளங்கள் உருவாகிவிட்டன. நான் இதுபோன்ற தளங்களையும் கவனித்து வருகிறேன். எனக்கும் பெண்களை மையப்படுத்திய படங்களில் தொடர்களில் நடிக்க ஆசை தான்.

ஆனால் பேட்ட, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடிப்பது எளிது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்தால் எல்லா சுமையையும் நம் தோளில் தான் விழும். நமது முழு கவனத்தையும் அந்த படைப்புக்கு தரவேண்டி இருக்கும்.

கே:- நீங்கள் நடித்த பழைய படங்களை பார்க்கும் போது என்ன தோன்றும்?

ப:- அப்போது நான் நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தேன். ஒருநாளில் பெரும்பாலான நேரம் படப்பிடிப்பு தளங்களிலேயே போகும். பண்டிகையோ விடுமுறை நாட்களோ எனக்கு கிடையாது. அதுபோல இன்று நடிக்க சொன்னால் நான் மறுத்து விடுவேன். எனக்கு குழந்தைகள் மிக முக்கியம்.

கே:- உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான 3 படங்களை சொல்ல முடியுமா?

ப:- வாலி, பிரியமானவளே, கன்னத்தில் முத்தமிட்டால். யூத் படத்தில் நான் ஆடிய ஆல்தோட்ட பூபதி பாடல். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.


Post a Comment

CAPTCHA
Refresh

*