By March 15, 20190 CommentsReport

தளபதி 63 படம் வண்ணமயமாக ஜாலியாக இருக்கும் – நடிகர் விஜய் தகவல்..!!

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

விஜய் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. மெர்சல், சர்கார் படங்களில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. விஜய் நடித்த கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் மீடியா முன்பு விஜய் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

சென்னையில் இருக்கும் வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ், சமீபத்தில் நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம் பற்றி அவர் விஜய்யிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜய், இந்தபடம் “வண்ணமயமான, கொண்டாட்டமான படமாக இருக்கும். எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும். கடைசி சில படங்கள் கொஞ்சம் சீரியசாக இருந்தது.படத்தின் இறுதிக்காட்சியில் மீடியா முன்னாடி பேசறது எனக்கே போர் அடிச்சிடுச்சு” என்று பதில் அளித்துள்ளார்.

இந்த ட்விட் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆனது. விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர தொடங்கினார்கள். ஆனால் ராகேஷ் இந்த டுவிட்டைப் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

படக்குழு அவரை அணுகி நீக்கச் சொல்லியிருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் அவரது டுவிட் பலரால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*