மம்தா வாழ்க்கை படத்தை வெளியிட தடை..!!

மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து “பாகினி” என்ற சினிமா படம் எடுக்கப்பட்டது. இப்படத்தை நாளை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்து இருந்தது.

பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் மம்தா சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.

மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு பொலிட் பீரோ உறுப்பினர்கள் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் மம்தா படத்தின் டிரெய்லரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதே போல் பா.ஜனதா மாநில துணைத் தலைவர் ஜாய்பிரகாஷ் மஜும்தர் அளித்துள்ள கடிதத்தில், பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்ட நடைமுறையை மம்தா படத்துக்கும் கடை பிடிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை சினிமா படத்தை ஓட்டுப்பதிவு நிறைவு பெறும் நாளான மே 19-ந்தேதி வரை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

மேலும் படத்தின் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*