‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகருக்கு ரூ.521 கோடி சம்பளம்..!!

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களில் மிக பிரபலமானவை ‘அயன் மேன்’ தொடர் திரைப்படங்கள். இதுவரை 3 பாகங்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் ‘அயன் மேன்’ கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கும்.

‘அயன் மேன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஹாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார்.

2008-ம் ஆண்டு வெளியான ‘அயன் மேன்’ படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ராபர்ட் டவுனி ஜூனியர் தனது சம்பளத்தை 10 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.70 கோடி) உயர்த்தினார். அத்துடன் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் நடிக்க, 10 மில்லியன் டாலர் போக, படத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் 2.5 சதவீதம் சம்பளமாக கிடைக்கும்படி ஒப்பந்தம் போட்டார்.

அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு ஒட்டுமொத்தமாக 75 மில்லியன் டாலர் (ரூ.521 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம்) சம்பளம் கிடைத்திருப்பதாக அமெரிக்காவின் ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வசூல் செய்தது. அண்மையில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ 7 நாட்களில் ரூ.9,000 கோடி வசூல் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*