புஷ்கர் காயத்ரியுடன், சமுத்திரக்கனி புதிய கூட்டணி..!!
ஒய் நாட் ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஏலே’.
சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர் நடிக்க, ஹலிதா ஷமீம் எழுதி இயக்கும் இந்த படம் நியோ ரியலிஸ்டிக் காமெடி படமாக உருவாகிறது. எஸ்.சசிகாந்த் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.
இதுகுறித்து புஷ்கர் & காயத்ரி கூறும்போது, “பெரிய திரையில் நாம் விரும்பும் கதைகளை கொண்டு வரும் கனவு எங்களுக்குள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது ஹலிதா ஷமீம் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. எனவே, எஸ்.சசிகாந்த் இந்த மாதிரியான ஒரு யோசனையை கொண்டு வந்தபோது, நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க உடனே ஒப்புக் கொண்டோம்” என்றனர்.
இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய, இப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் “ஏலே” படத்தை நான் இயக்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தொடர்ந்து இரண்டு மாதங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கேபர் வாசுகி இசையமைக்க, வினோத் ராஜ்குமார் கலை பணிகளையும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.