நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியா? விஷால் ஆலோசனை..!!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி போட்டியிட்டு வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும் விஷால் பொதுசெயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபரில் தேர்தல் நடத்தி இருக்கவேண்டும். ஆனால் சங்கத்தின் கட்டிட வேலை நடப்பதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன், ஜூலையில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இந்த தேர்தலில் விஷால் மீண்டும் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சங்கத்தின் செயற்குழுவில் விஷால் கலந்துகொள்ளவில்லை. செயற்குழு முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் நாசர் மீண்டும் போட்டியிடுவது பற்றி விரைவில் அறிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில் நேற்று இரவு விஷால் தலைமையிலான அணியினர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர். விஷால், நாசர், பூச்சி முருகன், ரமணா, வழக்கறிஞர் கிருஷ்ணா ஆகியோர் இதில் பங்குபெற்றனர்.

மீதம் இருக்கும் கட்டிட பணிகளை முடிப்பது, அதற்காக தேவைப்படும் நிதியை திரட்டுவது, தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது ஆகியவை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் மறுபடியும் போட்டியிடுவதாகவும், பூச்சி முருகன் துணைத் தலைவராகவும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*