டிவி நடிகையை திருமணம் செய்வதாக மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவரிடம் விசாரணை..!!

பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தந்தை சுப்பிரமணியுடன் வசித்து வருகிறார்.

இன்று காலை குடியிருப்புக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்றார். அவர் கதவைத் தட்டியதும் ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி அங்கு வந்தார். அப்போது அந்த வாலிபர் நடிகை ரித்திகாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே வாலிபர் நடிகையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அப்போது நடிகை ரித்திகாவும் இருந்தார்.

இதற்குள் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், குடியிருப்பு காவலாளியும் அங்கு வந்தனர். அவர்கள் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் என்பது தெரிந்தது. என்ஜினீயரிங் மாணவரான அவர் வேலை சம்பந்தமாக சென்னை வந்துள்ளார். இன்று சொந்த ஊருக்கு செல்ல இருந்த நிலையில் நடிகையின் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.

போலீசாரின் விசாரணையின் போதும் நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பரத் தொடர்ந்து கூறி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்ட பரத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*