ஜெயலலிதா வாழ்க்கைப் படம் – உடல் எடையை குறைத்து கூட்டும் கங்கனா ரணாவத்..!!

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா – தமன்னா – நந்திதா நடித்த தேவி-2 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியதாவது,

“பிரபுதேவா, தமன்னாவை வைத்து நான் இயக்கிய தேவி படம் நன்றாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தேன். ஒரு மனிதருக்குள் இரண்டு பேய்கள் புகுந்து ஆட்டி படைப்பதுபோல் திரைக்கதை அமைத்தேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தால் தேவி 3-ம் பாகம் எடுப்பேன்.

தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம்.

ஜெயலலிதா தனது 16-வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். எனவே அவரது 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்தும், பின்னர் கூட்டியும் நடிக்கிறார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும் வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார் என்பதே படத்தின் கருவாக இருக்கும் என்றார்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*