தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை..!!

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.

படத்தின் தலைப்பையும், விஜய் தோற்றத்தையும் அவரது பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந் தேதி மாலை வெளியிடுகிறார்கள். படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வினோத், பேரரசு ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. மோகன்ராஜாவும், “விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கி உள்ளேன். மீண்டும் அவர் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார். தற்போது விஜய்யின் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது முடிவாகி உள்ளது. இவர் ஏற்கனவே மாநகரம் படத்தை இயக்கி உள்ளார். தற்போது கார்த்தியின் கைதி படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

விஜய்யின் 64-வது படத்தை அவரது உறவினரான பிரிட்டோ தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே செந்தூரபாண்டி, ரசிகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார். இசையமைப்பாளராக அனிருத்தையும், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியனையும் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை பரிசீலிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*