பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாவே மேல் – மந்திரா பேடி..!!
90களின் ஆரம்பத்தில் சாந்தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் புகழ்பெற்றவர் மந்திரா பேடி. தொடர்ந்து பல தொடர்களில் நடித்தாலும் 2003-ல் ஆரம்பித்து, தொடர்ந்து பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பில் தொகுப்பாளராக மந்திரா பேடி தோன்றியது, அவருக்கு சர்வதேச அளவில் புகழைத் தேடித்தந்தது.
இதன் காரணமாக 2004-ல் தமிழில் ‘மன்மதன்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘சாஹோ’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வரும் மந்திரா பேடி தென்னிந்திய சினிமாவில் சில படங்கள் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது:- “அங்கு எனக்கு தரப்படும் கதாபாத்திரங்கள் நவீனமாக இருக்கின்றன. வேலை கலாச்சாரம் பல வகைகளில் மும்பையை விட மேம்பட்டதாக இருக்கிறது. அவர்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்கின்றனர்.
ஒரு பட வேலைக்கான கால நேரம் சரியாக திட்டமிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறது. எனக்காக கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன. இந்த அனுபவங்கள் என் திறமைகளை பட்டை தீட்ட உதவியதற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மொழிப் பிரச்சினையைத் தாண்டி வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.