By February 8, 20200 CommentsReport

முருகனாக மாறிய யோகிபாபு: வழக்கும் விளக்கமும்…!!

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ‘காக்டெய்ல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (பிப்ரவரி 3) வெளியானது.

அந்தப் போஸ்டரில் முருகக் கடவுள் வேடத்தில் இருக்கும் யோகிபாபுவின் புகைப்படம் பல்வேறு விவாதங்களுக்கும் வித்திட்டுள்ளது. இந்த நிலையில் யோகி பாபுவை கைது செய்ய வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் முன்வைத்த கோரிக்கையில், “ஆறுபடை வீடு கொண்ட கோடானுகோடி பக்தர்கள் வணங்கத் தகுந்த தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அடையாளத்தை அழிப்பதற்கும் முருகப்பெருமானை ஒரு பக்திப் பொருளாகப் பார்க்காமல் ,

கேலிப் பொருளாக தமிழ் சமூகம் பார்க்கவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடும், இந்துக்கள் பெரும்பான்மையாக வணங்கும் முருகப்பெருமான் மீது உள்ள பக்தியை சிதைக்க வேண்டும் என்ற சிந்தனையோடும் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் பெரும்பான்மை இந்து சமுதாய மக்களை அவமானப்படுத்துவதாகும். வேற்று மதத்தை சார்ந்த உஸ்மான் ஃபஹீத் என்பவர் இந்து தெய்வங்களை அவமானப்படுத்தி படமெடுப்பது மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கமாகும்.

ஆகவே தமிழக அரசு, காவல்துறை மேற்படி நடிகர் யோகி பாபு மற்றும் இரா.விஜய முருகன், சௌந்தர், பைரவி, உஸ்மான் பஹீத் உள்ளிட்ட படக்குழுவினர் மீதும், தயாரிப்பு நிறுவனம் மீதும் சட்டநடவடிக்கை எடுத்து பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் “பிப்ரவரி 8-ஆம் தேதி தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமான் திருத்தலம் நோக்கி பாதயாத்திரை வரும் இந்தநேரத்தில் முருகப்பெருமானை அடையாள அழிப்பு செய்யும் இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள இயலாது.” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து காக்டெய்ல் படத்தின் இயக்குநர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “நிச்சயமாக யாரின் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதையும் சரி, போஸ்டரும் சரி உருவாக்கப்படவில்லை. என் பெயரிலேயே முருகனை கொண்டுள்ள நானும் ஒரு முருக பக்தன். யோகிபாபுவும் ஒரு முருக பக்தர். அதனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. இந்த படத்தின் கதைப்படி முருகன் சிலை ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாங்கள் வடிவமைத்தோம். முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திருவிழாக்களில் முருகர் வேடமிடுகிறோம். சிவன் வேடம் அணிகிறோம். மாறுவேடப் போட்டிகளில், தமிழர் கலை சார்ந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வேடங்கள் அணிகிறோம்.

எம் முருகப் பெருமானை வேடமிட்டு ஆராதிப்பது தமிழக மக்களின் வாடிக்கை தானே? அதையே சினிமாவில் காட்டும்போது மட்டும் எப்படி தவறாகி விடும்? இது முருகன், சிவனை போன்ற கடவுளை வழிபடும் கொண்டாடும் எங்களைப் போன்ற ஒவ்வொருக்கும் உண்டான தனிப்பட்ட உரிமையாகத்தான் பார்க்கிறோம். நாங்கள் வழிபடும் கடவுளை நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இது மதுவை மையப்படுத்திய படமும் அல்ல. இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள ‘காக்டெய்ல்’ என்னும் டைட்டில் கூட ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு வகை கிளியை மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கும் வேறு எந்த தவறான காரணமும் இல்லை. அதனால்தான் போஸ்டரில் முருகனின் வாகனமான மயிலை பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘காக்டெய்ல்’ என்கிற அந்தக் கிளியை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம்” என விளக்கம் அளித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*