By February 8, 20200 CommentsReport

சின்மயி மனு தள்ளுபடி: போட்டியின்றி தேர்வான ராதாரவி

டப்பிங் யூனியன் தலைவர் தேர்தலுக்காக சின்மயி தாக்கல் செய்திருந்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு, ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாடகியும் பின்னணி குரல் கலைஞருமான சின்மயி மீ டூ விவகாரத்தில் வைரமுத்துவிற்கு எதிராகப் பேசியதில் இருந்தே தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதன் காரணமாகப் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்த அவர் உறுப்பினராக இருந்த டப்பிங் யூனியனில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

டப்பிங் யூனியனில், 2006 ஆம் ஆண்டு முதல் 2016 வரை முறையாக சந்தா கட்டி வந்த சின்மயி தொடர்ந்து சந்தா கட்டத் தவறியதாகவும், இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் டப்பிங் யூனியன் தரப்பில் கூறப்பட்டது. அந்த நேரத்தில் டப்பிங் யூனியன் தலைவராக இருந்த ராதாரவி சின்மயிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018-ஆம் ஆண்டு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட அவரது பெயர், அந்த வருடம் நடைபெற்ற டப்பிங் யூனியன் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலிலும் இடம்பெறவில்லை. இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சின்மயி தொடர்ந்து போராடி வந்தார். அதன் அடிப்படையில் மீண்டும் அவரை யூனியனில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி, இடைக்கால உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வருடம் நடைபெற இருந்த டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். ராதாரவிக்கு எதிராக ‘ராமராஜ்யம்’ என்ற அணியின் சார்பில் போட்டியிட சின்மயி வந்திருந்த நிலையில், சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்று கூறி அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். தனக்கு எதிராக நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் மீ டூ விவகாரமும், வைரமுத்துவிற்கு எதிராகப் பேசியதுமே காரணம் என்று அவர் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் டப்பிங் யூனியன் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று(பிப்ரவரி 5) நடைபெற்றது.

ஆனால் சங்கத்தின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்று கூறி சின்மயியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*