அண்ணாத்த: கமலிடம் கடன் வாங்கிய ரஜினி…!!
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்திற்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். அரசியல் பணிகளிலும், திரைவாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்திவரும் ரஜினிகாந்தின் 168-ஆவது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு (பிப்ரவரி 24) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘தலைவர் 168’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 18 ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பமானது. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
திரைப்படப் பாடல்கள் தொடர்ந்து திரைப்பட டைட்டில்களாக மாறிவரும் இந்த சூழலில், ரஜினிகாந்த்தும் அதே வழியைத் தேர்வு செய்துள்ளார். கமல் கதாநாயகனாக நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடல் மிகவும் பிரபலமானது. அந்தப் பாடலின் முதல் வரி ரஜினிகாந்தின் புதிய படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.