By March 3, 20200 CommentsReport

திரெளபதி…!!!

போலி பதிவுத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நாயகனின் பழிவாங்கும் படலமே ‘திரெளபதி’.

சிறையில் உள்ள பிரபாகரன் (ரிச்சர்ட்), தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா)அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து பிணையில் வெளியே வருகிறார். நேராக தன் சொந்தக் கிராமத்திற்கு செல்லாமல் சென்னை வரும் பிரபாகரன், பதிவாளர் அலுவலகத்தில் சைக்கிளில் தேநீர் விற்பவராக வேடமிட்டு, தன் மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்ற, அடுத்தடுத்த கொலைகளைச் செய்கிறார். பிரபாகரன் உண்மையிலேயே ஆணவக் கொலைகளைச் செய்தாரா, பிணையில் வந்த பிரபாகரன் ஏன் அடுத்தடுத்த கொலைகளைச் செய்ய வேண்டும், திரெளபதி சபதம் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது திரைக்கதை.

திரெளபதி படமாக வெளியாவதற்கு முன்பே, சர்ச்சைக்குரிய வசனங்களைக் கொண்ட அதன் டிரெய்லரினால் பரவலான கவனத்தைப் பெற்றது. பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற படங்கள் விளிம்பு நிலை மக்களின் கதையாக வரும் போது, ஏன் எதிர்நிலையிலிருந்தும் இது போன்ற கதைகள் வரக்கூடாது என்பதே இப்படத்தை ஆதரித்த பெரும்பாலோனோரின் குரலாக இருந்தது. ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையால் உருவாக்கப்பட்ட இப்படம், இதன் டிரெய்லர் வெளியீட்டிற்குப் பின், மெல்ல மெல்ல சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியது.

முதலில் சினிமாவாக, தான் எடுத்துக் கொண்ட கருப்பொருளுக்கு சரியான வடிவமாக திரெளபதி இருக்கின்றதா எனப் பார்ப்போம். கடந்த 2013 ஆம் ஆண்டில், சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில், விதிகளுக்கு முரணான முறைகளில் செய்யப்பட்ட, குறிப்பாக அந்த ஓராண்டில் மட்டும் 3500 க்கும் மேற்பட்ட போலி பதிவு திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதன் பின்னணியை வைத்து கதையமைத்திருக்கிறார் இயக்குநர் மோகன். சட்ட ரீதியாக நடந்த முறைகேட்டையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளையும் கூற வந்த திரெளபதி, அதற்குள் சாதிப் பெருமை, ‘நாடகக் காதல்’, பிற சாதிகளின் மீதான வன்மம் என எந்தெந்த வகையில் எல்லாம் விஷத்தை உமிழ முடியுமோ அப்படியெல்லாம் உமிழ்ந்துள்ளது இப்படம். ’அவனுங்க ஒரே கூட்டம்’, ‘அவனுங்களுக்கு ஆதரவாத்தானே சட்டம் இருக்கு’ என வசனங்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்ட சாதியினர் மீதான தாக்குதலாகவே இருக்கின்றது.

ஷங்கர் படங்களில் வருவது போலவே, நாயகன் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு, அரசு அலுவலங்களில் நடக்கும் முறைகேடுகளை கவனித்துக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை அடுத்தடுத்து பழிவாங்கி, முடிவில், மெஸேஜ் சொல்ல முயற்சிக்கும் இயக்குநர், குறைந்தபட்சம் ஒரு சினிமாவாக எடுத்துக் கொண்ட ஊடகத்திற்கு நியாயமாகவாவது செயல்பட்டிருக்கலாம். காட்சி வடிவமைப்பு, ஒளி, ஒலி, வசனம், நடிப்பு என அனைத்து இடங்களிலும் கோட்டை விட்டிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமென்றாலும், உருவாக்கத்தில் கொடுக்கும் முக்கியத்துவம், தொழில் நேர்த்தி என எதுவுமின்றி சொதப்பியிருக்கிறது படக்குழு. இது வரை சொல்லப்படாத விஷயம்(தேர்ந்தெடுத்த கதைப் பின்னணி) என்பதாலேயே, அதனை மட்டுமே நம்பி, திரை மொழியில் எந்த உழைப்பும் செலுத்தாமல், ஒரு சினிமாவாக எடுத்துவிட்டு, பின்னர் பிரமோஷனுக்காக ‘நாடகக் காதல்’, சாதிப் பெருமை என ஏதேதோ பேசி ஒப்பேற்றியிருக்கிறார் இயக்குநர். படத்திற்குள்ளும் அதற்கேற்றார் போல காட்சிகளையும் வசனத்தையும் அமைத்து விட்டு ‘நாடகக் கருத்தை’ கூறியிருக்கிறார்.

ரிச்சர்ட் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் சரியாக பொருந்தும் இவர், பல காட்சிகளில் நடிக்கிறாரா, நடிக்க முயற்சிக்கிறாரா இல்லை நடிக்காமலே இருந்து காட்சியை மெளனத்தில் கடத்துகிறாரா எனக் குழப்பமாகவே இருக்கிறது. நாயகியாக வரும் ஷீலா தன்னுடைய ‘ஓவர் ஆக்டிங்’கால் படுத்தி எடுக்கிறார். பசுமை குறித்து பேசுவது, எந்த குறையென்றாலும் வீடியோ எடுப்பது, ஊர் மக்களுக்கு பாடமெடுப்பது என அரசு விளம்பரங்களில் வரும் நடிகர்களை நினைவூட்டுகிறார். கருணாஸ், அம்பானி சங்கர், ஆறுபாலா, லெனா குமார், சப் ரிஜிஸ்ட்ரார் சேசு ஆகியோரது நடிப்பு ஆறுதல்.

எடுத்துக் கொண்ட கதைக்களத்திற்கு சரியான வடிவம் கொடுத்து எடுத்திருந்தாலே தப்பித்திருக்கக் கூடிய படத்தை, எங்கெங்கோ சுற்றி வளைத்து, ஒவ்வொரு காட்சியிலும் நீண்ட கருத்துக்கள் கூறி பார்வையாளனை படுத்தி எடுக்கிறார் இயக்குநர். ஒரு தீவிரமான விஷயத்தை படைப்பாக மாற்றும் பொழுது, அதனை விவாதப் பொருளாக, உரையாடல் களமாக மாற்றாமல் அங்கேயும் சுய பற்றோடும் செருக்கோடும் தேங்கி நிற்கும் இது போன்ற படங்கள், காலத்தால் எளிதில் மறக்கடிக்கப்படும் என்பதே யதார்த்தம்.

ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரித்து இயக்கியிருப்பவர் மோகன் ஜி, இசை: ஜூபின், ஒளிப்பதிவு: மனோஜ் நாராயணன், படத்தொகுப்பு: தேவராஜ், கலை: பா. ஆனந்த்


Post a Comment

CAPTCHA
Refresh

*