சந்தானத்தின் புது ஸ்டைல்: பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக்…!!!
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் பிஸ்கோத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வந்து தற்போது முழுநேர கதாநாயகனாக வளர்ந்திருப்பவர் சந்தானம். அவர் நடித்த தில்லுக்குத் துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஏ1 போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. சமீபத்தில் அவர் நடித்த டகால்டி திரைப்படம் வெளியானது. மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் ரிலீசுக்காகக் காத்திருக்கிறது.
இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(மார்ச் 4) வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கிவரும் இந்தத் திரைப்படத்தில் ஏ 1 படத்தில் நடித்த தாரா அலிஷா பெரி மீண்டும் சந்தானத்துடன் ஜோடி சேர்கிறார். முன்னதாக படத்தில் டைட்டிலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சந்தானம் ‘புதிய ஃப்ளேவரை சுவைக்க காத்திருங்கள்’ என்று கூறினார். அதற்கு ஏற்றவாறு இந்தப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அமைந்துள்ளது.
பழையகால உடை மற்றும் தோற்றத்தில் புல்லட்டில் சந்தானம் வருகிறார். அவரைச் சுற்றிலும் தோட்டாக்கள் தெறிக்க, கையில் இருக்கும் துப்பாக்கியில் ரோஜா இருப்பதாக அந்தப் போஸ்டர் அமைந்துள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.