அஜித்தை முந்திச் செல்ல மாட்டேன்..!!

எனக்கு அஜித்துடன் ரேஸில் கலந்துகொள்ள ஆசை என இந்தியாவின் முதல் பெண் ரேஸர் சாம்பியன் அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் மோட்டார் பந்தய வீராங்கனை என்ற பெயரைப் பெற்றவர் அலிஷா அப்துல்லா. இவர் தமிழில் ‘இரும்பு குதிரை’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நவீன் தேவராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து ரேஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு அஜித்துடன் ரேஸில் கலந்துகொள்ள வேண்டும் என ஆசை உள்ளது. அவரது ரேஸ் பந்தயத்தைச் சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடன் ரேஸில் கலந்துகொண்டதில்லை. இந்தியாவில் ஒரு சிலரால் மட்டும்தான் பைக் போன்றே, காரிலும் ரேஸிங் செய்ய முடியும். அதை மிகச் சரியாகச் செய்யும் நபர்களில் ஒருவராக அஜித்தும் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தைப் பற்றி பேசியதுடன் மட்டுமில்லாமல் ஒரு சிறு நிகழ்வையும் பகிர்ந்துள்ளார் அலிஷா, “நான் அவருடன் ரேஸில் கலந்துகொண்டால் அவரை முந்திச் செல்ல மாட்டேன். அவரே செல்லட்டும் என்று விட்டுவிடுவேன். ஏனெனில், ஒருமுறை பயிற்சியின்போது அஜித் மூன்றாவதாக வந்தார். அப்போது அவரை முந்திச் சென்ற இளைஞனை நோக்கி அஜித் ரசிகர்கள் கத்தியுடன் பந்தயச் சாலைக்கு வந்ததைப் பார்த்துள்ளேன். அதனால் அவருடன் ரேஸில் பங்குபெற்றால் மட்டும் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*