விவேக்கின் சர்ச்சை ட்விட்..!

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் விவேக். அவர் தன் படங்களில் காமெடி கலந்த பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிவருவதால் அவருக்கு “சின்ன கலைவாணர்” என்ற பட்டமும் உண்டு. அப்துல் கலாம், விவேகானந்தர் என சமூகத்தில் மதிப்புப் பெற்றவர்களின் கருத்துக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பரப்பிவருகிறார்.

இந்நிலையில் அவர் வழக்கமான பதிவாக ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “அன்பார்ந்த மாணவ செல்வங்களே… குழந்தைகளே…. உங்களின் கோடை விடுமுறையை அனுபவியுங்கள், அதேநேரம் விளையாடி முடித்த பிற்பாடு அதிகமாகத் தண்ணீரை குடியுங்கள். பெண் பிள்ளைகள் உங்களின் அம்மாவுடன் போய் அடுப்படியில் எப்படிச் சமையல் செய்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆண் பிள்ளைகள் உங்கள் தந்தையுடன் போய் அவர் பணிபுரியும் இடத்தை அறிந்துகொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

அந்தத் தகவலை அவர் பதிவிட்ட அடுத்த நொடியிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கிவிட்டன. தனது படங்களில் மட்டும் பகுத்தறிவான கருத்துக்களை சொல்லிவரும் விவேக் நிஜ வாழ்வில் அவற்ரைக் கடைப்பிடிக்காதது வருத்தம் தரக்கூடிய செயலாக உள்ளது. மேலும் ஆண் பிள்ளைகள் என்றால் சம்பாதிக்கப் போக வேண்டும். பெண் பிள்ளைகள் என்றால் அடுப்படியில் கரண்டியை பிடித்து சமைத்து கொட்ட வேண்டும். இது தான் உங்கள் பகுத்தறிவு கொள்கையா? ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை இந்த ஆணாதிக்க மனோ நிலையிலிருந்து விடுவிக்க முடியாதா எனக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக “அன்பு நண்பரே! தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை அனைத்துப் பெற்றோரும் ஆமோதிப்பர். என்னை புரிந்துகொண்ட உங்களுக்கு நன்றி. நான் எல்லா நாட்களையும் சொல்லவில்லை. இந்த விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டுக் கூறியிருக்கிறேன். மதிப்பு மிகு பெற்றோர்கள் புரிந்து கொள்வர். அவசரப் பட்டு எதிர்மறை, மற்றும் கொச்சை விமர்சனம் வைப்போரையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். பாவம் அவர்கள் புரிதல் அவ்வளவே” என்று பதிவிட்டுள்ளார்.

சமையலைப் பெண்களும் கடின உழைப்பை ஆண்களும்தான் கற்க வேண்டுமா என்ற கேள்விக்கு விவேக் பதில் சொல்லவில்லை.


Post a Comment

CAPTCHA
Refresh

*