சிவகார்த்தியுடன் கூட்டணி அமைத்த ராஜேஷ்..!!

சிவகார்த்திகேயன் தனது அடுத்தபடத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் மூன்றாம் முறையாக இணைந்த சிவகார்த்திகேயன் சீமராசா படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரு படங்களும் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பு பெற்ற நிலையில் ஹாட்ரிக் வெற்றியடிக்கும் முனைப்பில் இந்தப் படத்தில் களமிறங்கினார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் சிவகார்த்திகேயன் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

சிவா மனசுல சக்தியில் அறிமுகமான ராஜேஷ் தொடர்ந்து பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை இயக்கினார். முதல் மூன்று படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரிதாகக் கவனம் பெறவில்லை. இதனால் உடனடியாக ஒரு வெற்றியைக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயனுடன் களமிறங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகி யார் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜேஷ் முந்தியுள்ளார். பொன்ராம் ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*