ரஜினிகாந்த் விற்கப் போகும் மிட்டாய்..!!

திரைப்படங்களை எப்படி வர்த்தகப்படுத்த வேண்டும் என்பதை இந்திப் படங்களின் மார்க்கெட்டிங் மேனேஜர்களிடம் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டால், படத்தின் பட்ஜெட்டில் 20% ஸ்பான்சர் மூலம் பெற முடியும்.

ஒப்பந்தபடி ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களின் விளம்பரங்கள் திரைப்படத்தில் இடம்பெற்று விட்டால், “அடுத்த படம் எப்போ தொடங்குறீங்க” என அந்நிறுவனமே கேட்கும்.

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு ஸ்பான்சர் வந்து குவியும். ஆனால் சிவாஜி, எந்திரன் இரு படங்களையும் ஷங்கர் இயக்கியதால் விளம்பரங்களைப் படத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். ஷங்கர் தான் இயக்கும் படங்களில் பிற நிறுவனங்களின் விளம்பரங்களைப் பணத்திற்காக அனுமதிப்பதில்லை.

ரஜினிகாந்த் நடித்து வெளியான லிங்கா படத்தில் நகைக்கடை விளம்பரம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடித்த கபாலி படத்திற்கு ஸ்பான்சர் மூலம் எப்படியெல்லாம் வருவாய் ஈட்ட முடியும் என்பதை அறிமுகப்படுத்தினார். விமான டிக்கெட் முதல் உள்ளூர் மருத்துவமனையில் உடல் பரிசோதனை வரைக்குமான சலுகையும் அதனை கபாலி பட டைட்டிலை வைத்து விளம்பரம் செய்துகொள்ளக் குறிப்பிட்ட தொகையை வருவாயாகவும் பெறும் வசதி இருப்பதைத் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டினார் கலைப்புலி தாணு.

தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் என மூவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே ஸ்பான்சர் பெறுவது இயலும். காலா படத்தில் மாமனார் நடிக்கும் படத்தை மருமகன் தனுஷ் தயாரிப்பதால் இயக்குநர் ரஞ்சித் எதற்கும் மறுப்புக் கூற முடியாது. இதனால் படத்தின் வெளியீட்டையொட்டி ஸ்பான்சர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.

படங்களை விளம்பரத்தை வைத்தே ஓட வைக்கும் கலையை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’ படத்தைத் தயாரித்தபோது, அந்தப் படத்தின்போது ‘ஏர்டெல், ஃபேர் அன்ட் ஹேன்ட்சம், முத்தூட் பைனான்ஸ், கேட்பரி பைவ் ஸ்டார்’ ஆகியவற்றுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டார். அந்த நிறுவனங்கள் கணிசமான தொகையைப் படத்தயாரிப்பாளருக்குத் தந்தன.

தற்போது ‘காலா’ படத்தையும் சில நிறுவனங்களுடன் இணைந்து சந்தைப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இது பற்றிய அறிவிப்பைப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘கேட்பரி ஃபைவ் ஸ்டார், ஹேவெல்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் இதுவரை ‘காலா’ படத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் எந்த மூலதனச் செலவும் இன்றிக் கோடிக்கணக்கில் தயாரிப்பாளருக்கு வருவாய் கிடைக்கும் ‘காலா’ படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை 75 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் விநியோக உரிமையை லைகா நிறுவனம் 125 கோடி கொடுத்து வாங்கியதாகவும் சொல்கிறார்கள்.

ஜுன் 7இல் வெளியாக உள்ள ‘காலா’ படம் மூலம் தனுஷ் சொந்தமாகப் படங்கள் தயாரித்ததில் ஏற்பட்ட கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதாக கூறுகின்றனர். கோச்சடையான் படத்தில் கடனை ஏற்படுத்தினார் ரஜினி மகள். காலாவில் ரஜினியின் பாப்புலாரிட்டியை வியாபாரமாக்கி வருமானத்தைக் கொண்டுவந்திருக்கிறார் மருமகன் தனுஷ்.


Post a Comment

CAPTCHA
Refresh

*