வாரிசு நடிகர்கள்: காஜல் கருத்து.!!

சினிமாவில் நடிக்கவரும் பெரிய நடிகர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு எளிதாகக் கிடைத்துவிடுகிறது என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நடிகர், நடிகைகளின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாவது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுதான். ஆனால் சினிமாவில் யாரேனும் ஒருவரின் வாரிசாக இருந்தால்தான் நிலைக்க முடியும் என்பது பொது விதியாக இருக்கிறது. வாரிசு நடிகர் என்பதால் மட்டுமே திரைத் துறையில் வெற்றி பெற்றுவிடவும் முடியாது. அதையும் தாண்டி ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் எந்தப் பின்புலமும் இல்லாமல் திரைத் துறையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து காஜல் அகர்வால் ஃபஸ்ட் போஸ்ட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “பிறக்கும்போதே யாரும் சினிமா நட்சத்திரமாகப் பிறப்பதில்லை. யாரேனும் நடிகர், நடிகைகள் ஏதாவது பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், அவர்களுக்கு முதல் வாய்ப்பு என்பது எளிதாகக் கிடைக்கும். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்திருக்க முடியும். அவர்களை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாரிசு நடிகர்களாக வந்த பல நடிகர்கள் கஷ்டப்பட்டே முன்னேறி இருக்கிறார்கள். விஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், ராம்சரண், நாகசைதன்யா, அல்லு அர்ஜுன், கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் வாரிசுகளாக இருந்தாலும் திறமையாலும் கடினமான உழைப்பாலுமே வளர்ந்துள்ளனர். உழைப்பையும் கஷ்டத்தையும் நம்பித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“முதல் வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருந்தாலும் உழைப்பால் முன்னேறி பெயர் புகழ் அடைந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் வாரிசுகளாக இருப்பதுதான் கஷ்டமான ஒன்று. பெரிய நடிகர்கள் மகன்கள் என்பதால் அவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். வெற்றிக்காக மற்றவர்களைவிட அவர்கள் அதிக கஷ்டப்பட வேண்டும். அதைவிட எந்தப் பின்னணியும் இல்லாமல் வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடாது. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*