க்ரைம் த்ரில்லரில் மிரட்டும் ராஜா ரங்குஸ்கி

ராஜா ரங்குஸ்கி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் டீஸரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

‘பர்மா’, ’ஜாக்சன் துரை’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. மெட்ரோ படத்தில் நடித்து கவனம் பெற்ற சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சித்து +2 படத்தில் நடித்த சாந்தினி கதாநாயகியாக நடித்துள்ளார். அனுபமா குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காதலைச் சொல்ல கஷ்டப்படும் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகன் போன்று வரும் சிரிஷ், ராஜா என்ற காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். சாந்தினி ரங்குஸ்கி என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். ரொமான்டிக் திரைப்படம் போல் ஆரம்பிக்கும் டீஸர் உடனடியாக க்ரைம்-த்ரில்லர் பாணிக்கு மாறுகிறது. கதாநாயகனுக்கு காதல் கைகூடும் நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் கொலை மிரட்டல் வருகிறது. அந்த எண், முகவரி அனைத்திலும் கதாநாயகனின் பெயரே உள்ளது. யார் மிரட்டல் விடுப்பது; அதில் இருந்து கதாநாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதை டீஸரைப் பார்க்கும்போது உணரமுடிகிறது.

ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆண்டு உருவான எந்திரன் திரைப்படத்தில் எந்திரன் ரஜினி ஐஸ்வர்யாவைக் கடித்த கொசுவைப் பிடித்துவருவார். அந்தக் கொசுவுக்கு எழுத்தாளர் சுஜாதா வைத்த பெயர் ராஜா ரங்குஸ்கி என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், சஃபிக் முகமது அலி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். வாசன் புரொடக்‌ஷன், பர்மா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*