கறுப்பு வெள்ளை நடிகர்கள்..!!

மணிரத்னம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கும் படங்களுக்குத் தமிழ் திரையுலகில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதையே முன்னணி நடிகர்கள் பலரும் கனவாகக் கொண்டுள்ளனர். தற்போது ஒரு நட்சத்திர பட்டாளத்தையே தனது படத்தில் நடிக்கவைத்துக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவைத் தவிர விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்முறையாக இவரது இயக்கத்தில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் சரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கான ஒத்திகைகள் முடிக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

படத்தின் கதை குறித்த தகவல்கள் ஒருபக்கம் வலம்வந்து கொண்டிருக்க, நடிகர்களின் கெட் அப்களை வெளிப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவ்வப்போது நடிகர்களின் புகைப்படங்களை கறுப்பு வெள்ளையில் எடுத்து பகிர்ந்து வருகிறார். தற்போது அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் ஆகிய நான்கு கதாநாயகர்களும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் லைகா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*