விருது கொடுக்காதது ஏமாற்றமே: பார்வதி..!!
தேசிய விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் அனைவருக்கும் விருது கொடுக்காதது ஏமாற்றம் அளித்ததாக நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் முக்கியமானது இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகளே. வழக்கமாக குடியரசுத் தலைவர் தலைமையில் கோலாகலமாக நடைபெறும் இந்த விருதுகள் வழங்கும் விழா மே 3ஆம் தேதி சர்ச்சைகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் நடைபெற்றது.
64 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மரபுக்கு மாறாக தேசிய விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ஒரு மணி நேரம் மட்டும் கலந்துகொண்டு 137 பேரில் 11 பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்கினார். மற்ற கலைஞர்களுக்கு மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இராணி, ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோர் வழங்கினார்கள்.
இது விருது பெறவந்த கலைஞர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் 60க்கும் மேற்பட்ட திரைப்படக் கலைஞர்கள் விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலையாள நடிகை பார்வதி மேனன் டேக் ஆப் என்ற மலையாள படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதேபோல நடிகர் ஃபகத் ஃபாசிலும் சிறந்த நடிகருக்கான விருது பெற டெல்லி சென்றிருந்தார். இவர்கள் விருது வழங்கும் விழாவைப் புறக்கணித்தனர். இதன் பிறகு விருது கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறி அன்று மாலையே ஃபகத் ஃபாசில் ஊருக்குத் திரும்பிவிட்டார். நடிகை பார்வதியும் கேரளாவுக்குக் கிளம்பி வந்துவிட்டார்.
இதுகுறித்து பார்வதி தி நியூஸ் மினிட் இணையதளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், “குடியரசுத் தலைவர் கையால் தேசிய விருது பெறுவது என்பது மிகவும் கௌரவமான மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாகும். முதன்முறையாக விருது பெறுபவர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், குடியரசுத் தலைவர் அனைவருக்கும் விருது கொடுக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த விருது பெறும் நிகழ்வுக்கு எங்கள் குடும்பத்தினரும் வந்தனர். ஆனால் அவர்களும் ஏமாற்றத்தை அடைந்தனர். இந்தப் போராட்டம் வன்முறை அல்ல; நாங்கள் நியாயமான கவலையை வெளிப்படுத்தினோம். இது குறித்து இன்னும் எந்தவொரு கடிதமும் எங்களுக்கு வரவில்லை. இனிமேல் தேசிய விருதுகளை அங்கீகரிப்பது சந்தேகமே” என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த இயக்குநர் விருது பெற்ற மலையாளப் பட இயக்குநர் ஜெயராஜன், சிறந்த பாடகர் விருது பெற்ற கே.ஜே.யேசுதாஸ் ஆகியோர் குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.