மோடியால் பறிபோன சினிமா வாய்ப்புகள்..!!

மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவதால் பாலிவுட் வாய்ப்புகள் முழுவதும் தடைபட்டுள்ளதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியையும் மத்திய அரசின் கொள்கைகளையும் தொடர்ந்து விமர்சித்து வருபவர் பிரகாஷ்ராஜ். இவரது நீண்ட கால நண்பரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பின் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகிறார்.

பெங்களூரில் டைம்ஸ் நவ் கான்கிளேவ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரகாஷ்ராஜ், “நான் கேள்விகள் கேட்கத்தொடங்கிய பின் பாலிவுட் பட வாய்ப்புகள் முழுவதுமாக நின்று போனது. ஆனால், தென்னிந்தியத் திரையுலகில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் பத்து படங்கள் வரை நடித்துள்ள பிரகாஷ்ராஜ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகில் நடித்து வருகிறார். “என்னை ஏழையாக்க அவர்களுக்கு வலிமை போதாது. நான் ஏற்கெனவே சம்பாதித்து விட்டேன். இன்னும் பொருள் ஈட்டும் அளவுக்கு என்னிடம் திறமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரகாஷ்ராஜ் இந்துத்துவாவுக்கு எதிராகப் பேசத் தொடங்கிய பின் விளம்பரப்பட வாய்ப்புகள் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*