என் திறமை வெளிப்படும்: ரகுல்..!!
சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘என்ஜிகே’ படத்தில் என் திறமை வெளிப்படும் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உட்பட பலர் நடிக்கும் படம் ‘என்ஜிகே’. தற்போது, இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இந்தப் படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ரகுல் பிரீத் சிங் தெலுங்கில் இருந்து மீண்டும் தமிழுக்கு நடிக்க வந்த பிறகு முதலில் கார்த்தியுடன் நடித்தார். இதில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். தீரனில் இவருடைய கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்படவில்லை. எனவே, இந்தப் படத்தை பெரிதும் நம்புகிறார்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ள ரகுல், “நான் தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல; இந்தி படங்களிலும் நடித்து விட்டேன். ஆனால் இந்த ‘என்ஜிகே’ படத்தில் மிகவும் அருமையான வேடம் கிடைத்திருக்கிறது. நான் இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடம். எனது நடிப்புத்திறமை நன்றாக வெளிப்படும் பாத்திரத்தை செல்வராகவன் எனக்குக் கொடுத்து இருக்கிறார்.
நான் கன்னட சினிமாவில்தான் முதலில் அறிமுகமானேன். அப்போது, தமிழில் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி மிகவும் பிரபலம். அதன் கன்னட ரீமேக் ‘கில்லி’ என்ற பெயரில் தயாரானது. அதில்தான் முதலில் நடித்தேன். நான் அறிமுகமானதே செல்வராகவன் கதையில்தான். இப்போது நடித்துவரும் ‘என்ஜிகே’, அவருடைய கதையில் நான் நடிக்கும் இரண்டாவது படம். இது பெயர் சொல்லும் படமாக அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.