நீட் : திரைப் பிரபலங்களின் குரல்..!!

தமிழகத்தில் நீட் தேர்விற்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு எதிர்ப்புகளும், ஆதரவும் இருந்து வந்தன. இந்த நிலையில் நீட் தேர்வு எழுத கேரளா வந்திருந்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், திரைத் துறையைச் சார்ந்த பலரும் கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷால்

“நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறிகொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமி கனவை நிறைவேற்றுவது நம் ஒவ்வொருவருடைய கடமை. கஸ்தூரி மகாலிங்கத்திற்கு அதற்கான உதவிகள் செய்ய தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் பதில் கொடுப்பார்கள்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் அமீர்

“தொடர்ச்சியாக தமிழக மக்களை பலிகொடுக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது. போன வருடம் மாணவி, இந்த வருடம் மாணவனின் தகப்பனார். அவருக்கு நெஞ்சு வலின்னு சொல்றீங்க, அவருக்கு எதனால் அந்த வலி வந்தது என்று பார்த்தால் மூன்று, நான்கு நாட்களாக அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல். இதற்கு தமிழக அரசு, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்சி முழு பொறுப்பை ஏற்க வேண்டும். இரண்டு உயிரையும் யார் மீட்டு கொண்டு வர போவது. தேர்வு எழுதி வெளியே வந்ததும் அந்த மாணவன் என்ன செய்ய போகிறான். எவ்வளவு பெரிய கொடுமை. படிக்க வந்தால் உயிர் பலி கேட்குறீங்களே, அதற்குத் தான் இந்த அரசா, சட்டமா, இதற்குத்தான் உங்கள் பாடத்திட்டமா, இதற்குதான் ஆட்சியில் இருக்கிறீர்களா? அம்மாவோட ஆட்சியில் இருக்கக்கூடிய அனைவருமே வெட்கி தலைகுனிய வேண்டியது, தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமாக நடக்கும் இந்த இழவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“உங்க அம்மாவையே காப்பாற்ற முடியாத கோழைகள் நீங்கள். உங்க அம்மாவையே காப்பாற்ற முடியாத நீங்கள் எப்படி மற்றவர்களை காப்பாற்ற முடியும். பதவி வெறி, பதவி சுகம் இது தான் உங்களை ஆட்டி படைக்கிறது. பதவிக்காகத்தான் உங்க அம்மாவை இழந்தீர்கள், இப்போது தமிழக மக்களை இழக்கிறீர்கள். அடுத்த தலைமுறைக்கு எதை வைத்துவிட்டு போக போறீர்கள், நீங்கள் கட்டக் கூடிய நினைவு மண்டபங்களையா? ” என்று தன் கோபத்தை வெளிபடுத்தியுள்ளார்.

இயக்குநர் கெளதமன்

“இந்த மரணம் மிகவும் துயரமான செய்தி . இது தமிழகத்தின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அறிவிக்கப்பட்டுள்ள போர். தமிழர்களை எந்த வழியிலாவது மத்திய அரசு அழிக்கப் பார்க்கிறது. அதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த மரணம். ஏற்கனவே தமிழக விவசாயிகள், மீனவர்கள் என படிப்படியாக வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, அடுத்ததாக தமிழக மாணவர்களின் கல்வியில் கை வைத்துள்ளது. நீட் தேர்வுக்கான மையங்களை, வெளிமாநிலங்களில் அமைத்ததும் அதில் ஒரு வகையான நடவடிக்கை ஆகும். பெட்ரோலிய மண்டலங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ மையங்களும், வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளும் அமைக்க முடிந்த மத்திய மாநில அரசுகளால் ஏன் நீட் தேர்வு மையங்கள் அமைக்க முடியாதா? தொழில்நுட்பம் முன்னேறிவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு ஏன் இதை செயல்படுத்த முனையவில்லை? இது எல்லா தமிழக மக்களையும், மாணவர்களையும் எதிரிகளாக பார்க்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதிதான்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*