எனக்குக் கிடைத்த கௌரவம்..!!
சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றில் அவரது அம்மாவாக நடித்திருப்பது தனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சஞ்சய் தாத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சஞ்சய் தத் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், வெற்றி- தோல்வி, ஆயுத வழக்கு, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு என அவர் வாழ்க்கையில் நடந்தேறிய பல கட்டங்கள் படமாக்கப்பட்டுவருகின்றன.
மறைந்த பாலிவுட் நடிகை நர்கீஸின் மகன் சஞ்சய் தத். அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான இடம் அவரது அம்மாவுக்கு உண்டு. இத்திரைப்படத்தில் நர்கீஸாக நடித்திருப்பவர் நடிகை மனிஷா கொய்ராலா. நர்கீஸ் வேடத்தில் மனிஷா நடித்த பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட மனிஷா நர்கீஸ் கதாபாத்திரம் குறித்துப் பேசினார். அதில், “சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றில் நர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குக் கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன். அவரைப் போன்ற ஒரு சிறந்த நடிகையின் கதாபாத்திரத்தில் நடிப்பது என் கனவும்கூட. நான் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறேன். என் கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள், ரசிப்பார்கள் என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் அனுஷ்கா ஷர்மா, தியா மிர்ஸா, சோனம் கபூர், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத் சோப்ரா ஃபிலிம்ஸ், ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.