விஸ்வாசம்: களத்தில் நயன்..!!
அஜித் நடிப்பில் உருவாகிவரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்.
சிவா – அஜித் கூட்டணியில் உருவாகிவரும் விஸ்வாசம் படப்பிடிப்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மார்ச் 22ஆம் தேதி திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இதனையடுத்து நேற்று முதல் (மே 7) ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஜித் நேற்று முன்தினம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். இதனையடுத்து அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவும் நேற்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் படப்பிடிப்பை 25 நாட்களுக்கு மேல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். முதல் மூன்று நாட்கள் பாடல் காட்சிகளையும், பின்னர் ஆக்ஷன் காட்சிகளையும் படமாக்க உள்ளனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் நாளான நேற்று திருவிழா போன்ற வண்ணமயமான செட்டில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.