வலிகளை இறக்கிவைத்த கீர்த்தி..!!

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ’நடிகையர் திலகம்’ வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் இதன் தெலுங்குப் பதிப்பான ’மகாநதி’ இன்று (மே 9) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிப்பால் முன்னணி நடிகர்களுக்கும் சவாலாக விளங்கிய நடிகைகளில் சாவித்திரியும் ஒருவர். சாவித்திரியைப் போல் நடிப்பதே சவாலாக உள்ள நிலையில் சாவித்திரியாகவே நடிப்பது உண்மையில் கடினமான பணி. கீர்த்தி சுரேஷ் போன்ற இளம் நடிகை இந்தக் கதாபாத்திரத்திற்கு எப்படி சரியாகப் பொருந்துவார் என்ற கேள்வி படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இருந்துவருகிறது.

படத்தின் இயக்குநர் நாக் அஸ்வினிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, “சாவித்திரி கதாபாத்திரத்திற்கு நடிகையைத் தேர்ந்தெடுப்பது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. சாவித்திரியைப் போல் தோற்றம் உள்ளவர்கள் அவரைப் போன்ற நடிப்பை வெளிக்காட்டத் தவறினர். நடிப்புத் திறமை உள்ளவர்களுக்குத் தோற்றப் பிரச்சினை இருந்தது. அப்போதுதான் கீர்த்தி நடித்த ஒரு தமிழ்ப் பாடல் காட்சியைப் பார்த்தேன். என் படத்திற்கு சாவித்திரி கிடைத்துவிட்டார் என அப்போதே முடிவு செய்துவிட்டேன்” என்று கூறினார்.

இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் பயணம் குறித்து கீர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். “இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. தொடர்ச்சியாக கடின உழைப்பு, வலி, ஆர்வம், சண்டைகள், கோபம், மன அழுத்தம் ஆகியவை முடிவுக்கு வந்துள்ளன. அனைவரின் அன்பே என் வாழ்க்கையின் இந்த அழகான பயணத்தைத் தந்துள்ளது. புது அத்தியாயத்தின் தொடக்க நாள் இன்று. என்னை ஆசிர்வதியுங்கள்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*