புதிய களம் காணும் கார்த்திக் சுப்புராஜ்..!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்’ என்கிற நிறுவனத்தின் மூலம் வெப் சீரிஸை தயாரிக்க உள்ளார்.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற மாறுபட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக ரஜினியை இயக்க ஆயத்தமாகிவருகிறார். இதற்கிடையே, தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ என்கிற பட நிறுவனத்தின் வாயிலாக ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ போன்ற படங்களையும் தயாரித்திருந்தார். இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் டிஜிட்டல் யுகத்தில் ‘ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்’ என்கிற பெயரில் களம் காண இருக்கிறார். இந்தப் புதிய நிறுவனம் மூலம் வெப் சீரிஸ், மியூசிக் வீடியோஸ் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரிக்க உள்ளார்.

இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய கோணத்தில் சிந்தனையையும், சிரிப்பையும் கூட்டும் வீடியோக்கள் செய்வதே ‘ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்’ நிறுவனத்தின் நோக்கம். திறமை வாய்ந்த பல புதிய கலைஞர்களுடன் கைகோர்த்துப் பல பரிமாணங்களில் ஸ்கெட்ச் வீடியோஸ், வெப் சீரிஸ், மியூசிக் வீடியோஸ், ஆவணப் படங்கள், இணையத்திற்கென்று பிரத்யேகமான திரைப்படங்கள் என்று பல வெளிவர உள்ளன. ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸின் முதல் படைப்பு யூ ட்யூப் சந்தை. இது விர்ச்சுவல் ரியாலிட்டி வழியே யூ ட்யூப் உலகத்திற்குள் செல்லும் ஒரு முதியவரின் பயணம் பற்றிய கதையாக இருக்கும். இதில் நடிகர் சீனு மோகன் மற்றும் தமிழ் யூ ட்யூப் உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தப் பயணம் சவால் மிகுந்ததாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம். இப்பயணத்தில் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*