தெலுங்கில் தடம் பதிக்கும் பூஜா..!!
தொடரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பூஜா ஜாவேரி தற்போது தெலுங்கில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
தொடரி படத்தை தொடர்ந்து அதர்வா நடிக்கும் ருக்மணி வண்டி வருது படத்தில் பூஜா ஜாவேரி கதாநாயகியாக நடித்து வருகிறார். ராஜமோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். பூஜா தமிழ் தவிர தெலுங்கு, கன்னடப்படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.
ரவி தேஜா நடித்த டச் சேசி சுடு படத்தில் சிறப்பு தோற்றத்தில் பூஜா ஜாவேரி நடித்திருந்தார். குஜராத்தைச் சேர்ந்த பூஜா தற்போது அல்லரி நரேஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பி.வி.கிரி இந்தப் படத்தை இயக்குகிறார்.
அல்லரி நரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் பல்லகொள்ளு பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்டு வருகின்றன. பூஜா சம்பந்தபட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மே 15ஆம் தேதி முதல் நடைபெறும். பூஜாவின் கதாபாத்திரம் தெலுங்கில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.கே.எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் உடன் இணைந்து அல்லரி நரேஷ் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைத் தயாரிக்கிறார். இது தவிர பூஜா தெலுங்கில் 47 டேஸ் படத்தில் நடித்து வருகிறார்