இரும்புத் திரை: வெளியீட்டில் பிரச்சினையில்லை..!!

இரும்புத் திரை படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால், சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலமாகவே தயாரித்துள்ளார். இப்படம் நாளை (மே11) தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்கான பணிகளில் படக்குழுவினர் பரபரப்பாக இயங்கிவருகின்றனர்.

இந்த நிலையில், சைபர் கிரைம் பற்றிய கதையைக் கொண்ட ‘இரும்புத்திரை’ படத்தில்‌ டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக் கோரி நாமக்கல்‌ மாவட்டம் தத்தியாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(மே 8) வழக்கு தொடர்ந்தார். குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்படாமல் படம் வெளியானால் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மத்திய அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட நேரிடும் என்றும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 9) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரும்புத் திரை படத்துக்கு முறைப்படி தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது; மேலும் படம் வெளிவரும் முன்பே இந்தப் படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்று கூறி தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், இரும்புத்திரை படத்தின் கதைக்களம் குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது திரையுலக வாழ்க்கையில் இரும்புத்திரைதான் மிகவும் சர்ச்சைக்குரிய திரைப்படம். கருத்துச் சுதந்திரம் என்று பேசுவதுதான் இப்படத்திலுள்ள விஷயம். நமது தற்கால சமுதாயத்தில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து, என்னுடைய கோபத்தை வெளிப்படுத்த உதவிய இயக்குநர் மித்ரனுக்கு மிகுந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*