பாகுபலிக்கு சீன ரசிகர்களின் மரியாதை..!!

இந்தியாவின் பாக்ஸ் ஆஃபீசில் கட்டுக்கடங்காமல் துள்ளிய பாகுபலி 2 திரைப்படத்தை, சீனா பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனில் அடக்கியிருக்கிறது அவெஞ்சர்ஸ் திரைப்படம்.

சீனாவில் பாகுபலி (முதல் பாகம்) திரைப்படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தியாவின் மிகப் பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலியை இந்தியர்களைப் போலவே சீனர்களும் கொண்டாடினார்கள். அந்த தைரியத்தில் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின்போது இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்தனர் பாகுபலி தயாரிப்பாளர்கள். சீனத் திரையுலகத்துக்கும், அமெரிக்க திரையுலகத்துக்கும் தொழில் போட்டி இருப்பது உண்மைதான். ஆனால், பாகுபலியை விடவும் பல மடங்கு தொழில்நுட்ப மற்றும் திரைக்கதை உத்தியில் மேம்பட்ட அவெஞ்சர்ஸ் படத்தை உதாசீனப்படுத்தும் அளவுக்கு சீன சினிமா ரசிகர்கள் இரும்பு மனம் படைத்தவர்கள் அல்ல என்பது அவெஞ்சர்ஸ் திரைப்படம் முதல் நாள் வசூலில் 50 கோடி ரூபாயைக் கடந்திருப்பதிலிருந்து தெரிகிறது.

மே 4ஆம் தேதி சீனாவில் ரிலீஸான பாகுபலி 2 திரைப்படம் இதுவரை ரூ. 66 கோடியை வசூல் செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் வசூல் நிலவரமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாகுபலிக்கு ஏற்பட்ட இந்நிலையை சீன சினிமா ரசிகர்கள் விரும்பவில்லை. 2016இல் முதல் பாகம் ரிலீஸானபோது தங்களை மகிழ்வித்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தைக் கைவிட அவர்களுக்கு மனம் வரவில்லை. எனவே, அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் சுழற்சியில் சிக்கிய பாகுபலி திரைப்படத்தையும் சேர்த்து பாராட்டும் விதத்தில் தங்களது ஸ்டைலில் மீம்கள் பலவற்றை உருவாக்கி, பாகுபலிக்கு தங்களது மரியாதையைத் தெரிவித்திருக்கின்றனர்.

அவெஞ்சர்ஸ் அணியின் சூப்பர் ஹீரோக்கள், பாகுபலி நாயகன் பிரபாஸை ஆச்சரியத்துடன் பார்ப்பது போலவும், 66 கோடி வசூல் செய்ததைக் குறிப்பிட்டு சீன ராணுவ வீரரின் உடையில் பிரபாஸின் ஃபோட்டோவை எடிட் செய்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கின்றனர் சீன ரசிகர்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*