பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்..!!

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது பாடலாசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவருவதோடு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்துவருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் கதாநாயகியை மையமாகக் கொண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோலமாவு கோகிலா’. அனிருத் இசையமைத்துவரும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துவருகிறது.

இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ’ என்ற முதல் லிரிக்கல் வீடியோ, கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைந்து எழுதிய இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாட, இடையில் வரும் வசனங்களை கௌதம் மேனன் பேசியிருப்பார்.

இந்த நிலையில், ‘கல்யாண வயசு’ என்ற இரண்டாவது லிரிக்கல் வீடியோ, வருகிற 17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது என்று அனிருத் அறிவித்துள்ளார். அத்துடன், இந்தப் பாடலின் மூலம் முதன்முதலாக ஒருவர் பாடலாசிரியராக மாறியிருக்கிறார் என சஸ்பென்ஸ் வைத்தார். அந்த சஸ்பென்ஸ் தற்போது உடைந்திருக்கிறது. சிவகார்த்திகேயன்தான் அந்தப் பாடலாசிரியர் என அறிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அனிருத்.

தனுஷுடன் கூட்டணி அமைத்து ‘ஒய் திஸ் கொலைவெறி’ என்ற ஹிட் பாடல் மூலம் தன்னை பலருக்கும் வெளிப்படுத்திய அனிருத், தற்போது சிவகார்த்திகேயனை பாடலாசிரியராக்கியிருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*