மன அழுத்த பாதிப்பு: நடிகை சாய்ரா..!!

நீண்ட காலமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுவருவதாக பாலிவுட் நடிகை சாய்ரா வாசிம் தெரிவித்துள்ளார்.

ஆமிர் கான் நடிப்பில் வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தங்கல்’ படத்தில் அறிமுகமானவர் சாய்ரா வாசிம். அதனைத் தொடர்ந்து ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படத்தில் கதையின் நாயகியாகவும் இவரே நடித்திருந்தார்.

பொதுவாக 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மன அழுத்தம் ஏற்படும் எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் சாய்ரா வாசிம் நீண்டகாலமாக தனது 12 வயதில் இருந்தே டிப்ரஷன் என்னும் மன அழுத்தம் இருந்துவருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒரு நாளைக்கு 5 மாத்திரைகள். அவ்வப்போது ஆன்க்ஸைட்டி அட்டாக்குகள். அதற்காக இரவு நேரங்களில்கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தருணங்கள். எப்போதும் மனதில் ஒரு வெற்றுணர்வு. ஒருவித படபடப்பு, பிரமைகள் என வாடியிருக்கிறேன். ஒருசில நாட்கள் ஒருசேரத் தூக்கம். பின் சில நாட்களுக்குத் துக்கமின்மை என வாடியிருக்கிறேன். சில நாட்கள் அதிகப்படியாக உணவு அருந்துதல்; சில நாட்கள் பட்டினி என துன்புற்றிருக்கிறேன். 4.5 ஆண்டுகளுக்கு முன்னதாக எனக்கு இந்நோய் இருப்பது அறியப்பட்டது. அவ்வப்போது தற்கொலை எண்ணங்கள்கூட வந்து நீங்கும்.

எனக்கு ஆறுதல் கூறும் பலரும், 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மன அழுத்தமே ஏற்படாது எனக் கூறுவர். நானும் உண்மை என்னவென்று தெரிந்தாலும் ஏதும் புரியாததுபோல் தலையசைத்து வைப்பேன். அவர்கள் ஆறுதலுக்காக. இப்போது எனக்கு சமூக வலைதளங்களில் இருந்து சிறிய இடைவேளை தேவைப்படுகிறது. ரம்ஜான் நோன்பை எதிர்கொண்டிருக்கிறேன். இந்தக் காலத்தில் பள்ளிக்கூடம், வேலை, சமூக வலைதளம் என எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இருக்கப்போகிறேன். என் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளில் என்னையும் நினைவு கூருங்கள்” என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*