கனவு நனவானது: ஐஸ்வர்யா..!!
மணிரத்னம் படத்தில் நடிப்பது என் கனவு, அது நனவானது என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரின் நடிப்பில் உருவாகிவரும் படம் செக்க சிவந்த வானம். சிம்புவை வைத்து தனது முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடங்கினார் மணிரத்னம். பின்னர் அரவிந்த்சாமி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்தனர். ஜுங்கா படப்பிடிப்பை முடித்த பின்னர் விஜய் சேதுபதியும் டீமில் இணைந்தார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதுவரை சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக துபாய் செல்கிறது படக்குழு. அரவிந்த்சாமி தொடர்புடைய காட்சிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக ஐஸ்வர்யா சம்பந்தபட்ட காட்சிகளும் நிறைவடைந்திருக்கிறது.
இது குறித்து ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “செக்க சிவந்த வானம் படத்தில் எனக்கான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. மணி சாருடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். இது என் கனவும் கூட. அது இன்று நனவானது. மிக்க நன்றிகள் சார்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து அருண் விஜய்யும் தனக்கான படப்பிடிப்புக் காட்சிகளும் முடிவடைந்துவிட்டன என்று தெரிவித்திருப்பதுடன், “புகழ்பெற்ற பிரபலங்களான மணிரத்னம் சார் மற்றும் விக்னேஷ் சிவன் சார் இருவருடனும் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த டீமை இழந்ததை நினைத்து வருத்தமளிக்கிறது. மீண்டும் இணைவோம்” என்று தெரிவித்துள்ளார்.