ஆடைகள் காரணமல்ல: வரலட்சுமி..!!
பெண்கள் அணியும் உடையைக் கொண்டு அவர்களை விமர்சிக்கக் கூடாது என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நேற்று (மே 11) இரவு லைஃப் ஸ்டைல் ஷோரூம் திறப்பு விழாவில் நடிகை வரலட்சுமி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், “கலாச்சாரம் என்பது நமது மனதில் உள்ளது. நாம் அணியும் உடைகளில் இல்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குப் பெண்கள் அணியும் ஆடைகள் காரணமல்ல. ஆடைகளைக் கொண்டு விமர்சிக்கக் கூடாது. அமெரிக்காவில் பெண்கள் அணியும் ஆடைகளைக் குறித்து அசிங்கமாகப் பேசுவது இல்லை” என்று தெரிவித்தார்.
“குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீட்டில் நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோம் என்பது முக்கியம். ஆபாசமான காட்சிகளை பார்க்க அனுமதிக்காமல் அவர்களது வயதுக்குரிய கார்டூன் போன்றவற்றை பார்க்கச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வரலட்சுமி, “ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உள்ளது. அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரியது அல்ல. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்று கூறினார்.