அசுர குருவில் இணைந்த மஹிமா..!!

விக்ரம் பிரபு தற்போது நடிக்கும் அசுர குரு படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வாரம் வெளியான பக்கா திரைப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. நிக்கி கல்ராணி, பிந்து மாதவி என இரு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் நடித்திருந்த மஹிமா நம்பியார் நேற்று (மே 11) அசுர குரு படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ராஜ்தீப் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப் படக் குழு திட்டமிட்டுள்ளது. ரேணி குண்டா படத்திற்கு இசையமைத்த கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். யோகி பாபு, ராமதாஸ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

மஹிமா அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் படத்திலும் மஹிமா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*