ஜெயலலிதா வேடத்தில் நடிக்கவில்லை: கீர்த்தி சுரேஷ்..!!

ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கவில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ‘மகாநடி’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகியிருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரி போலவே கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பதாகப் பலரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இதனையடுத்து ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக இன்று (மே 15) திருப்பதி வந்தார் கீர்த்தி சுரேஷ்.

சாமி தரிசனத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நீண்ட நாட்களாக இங்கு வரவேண்டும் என நினைத்தேன். ஆனால், தொடர்ச்சியான ஷூட்டிங்கால் வர முடியவில்லை. இப்போதுதான் இங்கு வருவதற்கு நேரம் கிடைத்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நீங்கள் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறதே எனக் கேட்கப்பட்டபோது, “நான் அப்படி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, வேறு யாருடைய வாழ்க்கை வரலாற்றிலும் நான் நடிக்கவில்லை. இப்போதைக்கு ‘நடிகையர் திலகம்’ மட்டும்தான்” என்றார்.

கமல்ஹாசனை சந்தித்த காரணம் பற்றி கேட்கப்பட்ட போது, “படம் பற்றிக் கேள்விப்பட்ட கமல் சார், நேரில் அழைத்து என்னைப் பாராட்டினார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் இணைந்து நடிப்பது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை” எனத் தெரிவித்தார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*