ரசிகருக்கு போஸ்டர் ஒட்டிய சிம்பு..!!

சினிமா பிரபலங்களுக்கு ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது வழக்கம். ஆனால் ரசிகருக்காக போஸ்டர் ஒட்டியிருக்கிறார் நடிகர் சிம்பு.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன், அந்தப் பகுதி சிம்பு ரசிகர் மன்றத் தலைவர். கடந்த வாரம் நடந்த அவரது நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு மதனும், அவரது நண்பர் தீபக்கும் சேர்ந்து வல்லவன் ஃப்ரண்ட்ஸ் & பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். அதனால் சிக்கல் நேர்ந்திருக்கிறது.

இதன் காரணமாக பேனர் வைத்த மதனையும் தீபக்கையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். இந்தத் தாக்குதலில் மதன் பலியானார். சிம்புவின் ரசிகர் மன்றத் தலைவர் மதன் என்பதால், அவருடைய குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் டி.ராஜேந்தர்.

மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்ததால் சிம்புவால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய சிம்பு, மதன் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னதோடு, மதனுக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை அவரே ஒட்டினார். இதனால் சிம்பு ரசிகர்கள் நெகிழ்ந்திருக்கின்றனர்.

ரசிகர்களின் பிறந்த நாளிலும், திருமண நிகழ்விலும் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றத்தின் செயலாளராக இருந்து வந்த ஜீவன்குமார் கார் விபத்தில் இறந்ததற்கு கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபோது கதறி அழுதார். இந்த சம்பவங்கள் ரசிகர்கள் மீது நடிகர்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டின. ஆனால் சிம்பு ஒருபடி மேலே போய் ரசிகர் மீது கொண்ட பேரன்பினால் போஸ்டர் ஒட்டி அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டியிருக்கிறார். இந்தப் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

சிம்பு போஸ்டர் ஒட்டும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விவேக், “தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*