ஸ்ரீதேவிக்கு மேலும் ஓர் அங்கீகாரம்..!!
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிரான்ஸ் நாட்டின் கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
71ஆவது கான் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த மே 8ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பல உலக நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு திரைத் துறையில் சிறந்து பணியாற்றிய பெண் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது நடிகை ஸ்ரீ தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது சார்பில் இயக்குநர் சுபாஷ்கய், தயாரிப்பாளர் நம்ரதா கோயல் ஆகியோர் விருதைப் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் சுபாஷ்கய் 1986ஆம் ஆண்டு வெளியான கர்மா திரைப்படத்தில் ஸ்ரீதேவியுடன் பணிபுரிந்தவர்.
இவ்விருது குறித்து இந்தியா டுடேக்கு ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் அளித்த பேட்டியில், “உலகம் முழுவதும் இருக்கிறவர்கள் திரைப்படத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்துவருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய வேலை மூலம் அவர் வாழ்கிறார் என்பதை அறிந்திருப்பது ஆறுதலளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மாம் திரைப்படத்தில் நடித்ததற்காக, ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.