By March 3, 20200 CommentsReport

விடிவி-2: கௌதம் ரெடி தான், ஆனால்…

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ (விடிவி) திரைப்படம் ரிலீஸாகி 10 வருடங்கள் முடிவடைந்துவிட்டது. இந்த நிகழ்வைக் கொண்டாடும்விதமாக சோஷியல் மீடியாக்களில் பல தருணங்களைப் பதிவுசெய்து கௌதம் மேனனை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி செலுத்தும்விதமாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறினார் கௌதம் மேனன். அப்போது விண்ணைத் தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் குறித்த கேள்விகளுக்கு கௌதம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

‘விடிவி’ படம் ரிலீஸானபோது, அதன் க்ளைமாக்ஸில் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. கார்த்திக் – ஜெஸ்ஸி இணைந்தார்களா, இல்லையா என்பது குறித்து பெரும் விவாதம் தொடங்கியது. கடைசியில், ‘என் அடுத்த படத்துல என் காதலைப் பத்தி மேலும் சொல்றேன்’ என கார்த்திக் கூறியதோடு படம் முடிந்திருக்கும். எனவே, விடிவி-2 என்பது கௌதம் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடம்பிடித்தது. விடிவி படத்துக்குப் பிறகு கௌதம் – சிம்பு இணைந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானபோது விடிவி-2 திரைப்படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேறு படத்தைக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். அத்துடன் விடிவி-2 பற்றிய கேள்விகளையும் கௌதம் புறக்கணித்து வந்தார். ஆனால், இப்போது விடிவி 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் ரசிகர்களுடன் பேசியபோது இதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “சிம்பு தயார் என்றால் நான் விடிவி-2 எடுக்க தயாராக இருக்கிறேன். படம் ரிலீஸானதிலிருந்து இந்த 10 வருடங்களில் கார்த்திக்கின் பயணம் எப்படி இருந்தது என்பது குறித்துப் பேசும் படமாக அது இருக்கும்” என்று கௌதம் கூறினார்.

சிம்பு ஓகே சொன்னால் படம் எடுப்பேன் என்று கௌதம் கூறியதில் சில ரசிகர்களுக்கு வருத்தம். சிம்புவைப் பிடித்துவைத்து ஷூட்டிங்கை நடத்துவதே குதிரைக் கொம்பாக இருப்பதால், இது நடக்குமா என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதை ஒருவர் நேரடியாகக் கேட்டே விட்டார். “ஒருவேளை சிம்பு நடிக்கவில்லை என்றால், வேறு யாரை வைத்து இந்தப் படத்தை எடுப்பீர்கள்?” என்று கௌதமிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர் “சிம்பு இல்லையென்றால் இந்தப் படத்தை எடுக்கவே முடியாது. கார்த்திக்கின் கதையை கார்த்திக்கை வைத்துதான் சொல்ல முடியும். வேறொரு கேரக்டரை வைத்து அதை செய்ய முடியாது” என்று கூறினார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*